பதினோராம் ஸ்தலம்

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.

அனைவரும்: அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.

இயேசு நாதரை சிலுவையில் அறைகிறார்கள்:

way of the cross - station 11


விவிலியச் சிந்தனை(யோவான் 19:16-19,25 )
அப்போது பிலாத்து இயேசுவை சிலுவையில் அறையுமாறு அவர்களிடம் ஒப்புவித்தான். அவர்கள் இயேசுவைத் தம்பொறுப்பில் ஏற்றுக்கொண்டார்கள். இயேசு சிலுவையைத்தாமே சுமந்துகொண்டு "மண்டை ஒட்டு இடம்”என்னுமிடத்திற்குச் சென்றார். அதற்கு எபிரேய மொழியில் "கொல்கொதா” என்பது பெயர். அங்கே அவர்கள் இயேசுவையும் அவரோடு வேறு இருவரையும் சிலுவைகளில் அறைந்தார்கள். அவ்விருவரையும் இருபக்கங்களிலும் இயேசுவை நடுவிலுமாக அறைந்தார்கள்.பிலாத்து குற்ற அறிக்கை ஒன்று எழுதி அதைச் சிலுவையின் மீது வைத்தான். அதில் "நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன்” என்று எழுதியிருந்தது. சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலாமரியாவும் நின்றுகொண்டிருந்தனர்.


ஜெபம் : (எல்லோரும்)
அன்பு இயேசுவே! சிலுவையில் நீர் அறையப்பட்டபோது உம் கைகளையும் கால்களையும் ஆணிகளால் துளைத்தார்கள். உம் திருக்காயங்களால் நீர் எங்கள்காயங்களைக் குணமாக்கினீர். நீர் சிந்திய இரத்தத்தால் நாங்கள் கழுவப்பட்டுள்ளோம். அவமானச் சின்னமாகிய சிலுவையை நீர் மீட்பின் கருவியாக்கியதுபோல நாங்களும் எங்கள் துன்பதுயரங்களை உம் சிலுவையோடு இணைத்து உம் மீட்பின் பலன்களை இடைவிடாது துய்த்து அனுபவித்திட எங்களுக்கு அருள்வீராக. ஆமென்!

மு: எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ: எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மு: மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
அ: ஆமென்.

இன்னுயிர் அகன்றது உமைவிட்டு - பூமி
இருளினில் ஆழ்ந்தது ஒளி கெட்டு
எனக்காக இறைவா எனக்காக இடர்பட வந்தீர் எனக்காக

பன்னிரண்டாம் ஸ்தலம்