ஏழாம் ஸ்தலம்
முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி
உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
இயேசு நாதர் சிலுவையின் பாரத்தால் இரண்டாம் முறை தரையில்
குப்புற விழுகிறார்:
விவிலியச் சிந்தனை(மத்தேயு 18:21-22,35 )
அவர் இகழப்பட்டார் மனிதரால் புறக்கணிக்கப்பட்டார். வேதனையுற்ற மனிதராய் இருந்தார். நோயுற்று நலிந்தார் காண்போர் தம் முகத்தை மூடிக்கொள்ளும் நிலையில் அவர் இருந்தார். அவர் இழிவுபடுத்தப்பட்டார். அவரை நாம் மதிக்கவில்லை. மெய்யாகவே அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார். நம் துன்பங்களைச் சுமந்து கொண்டார். நாமோ அவர் கடவுளால் வதைக்கப்பட்டு நொறுக்கப்பட்டவர் என்றும் சிறுமைப்படுத்தப்பட்டவர் என்றும் எண்ணினோம். அவரோ நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்.நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார். நமக்குநிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்.
அவர் தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம்.ஆடுகளைப் போல நாம் அனைவரும் வழிதவறி அலைந்தோம். நாம் எல்லாரும் நம் வழியே நடந்தோம்.ஆண்டவரோ நம் அனைவரின் தீச்செயல்களையும் அவர்மேல் சுமத்தினார்.
ஜெபம் : (எல்லோரும்)
அன்பு இயேசுவே! சிலுவையின் பாரம் உம் தோள்களைஅழுத்தியதால் நீர் மீண்டும் ஒருமுறை கீழே விழுந்தீர்.ஆனால் மன உறுதியோடு மீண்டும் பயணத்தைத்தொடர்ந்தீர். சில சமயம் தோல்வியும் ஏமாற்றமும் என்னைத் துயரத்தின் உச்சக்கட்டத்திற்கு எடுத்துச் செல்கின்றன. நானோ, உம்மிடமிருந்தும் மற்றோரிடமிருந்தும் விலகி என் சுயமரியாதை, தன்னலம், பரிதாபம் ஆகியவற்றின் மத்தியில் மறைந்து கொள்கிறேன். நீர் எனக்குத் தேவையுள்ள நம்பிக்கையை அளித்து, மறுபடியும் துணிந்து எழுந்து, உம்மேல் நம்பிக்கைவைத்து முன்னேறிச் சென்றிட அருள்வீராக.ஆமென்!
மு: எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில்
தயவாயிரும்.
அ: எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில்
தயவாயிரும்.
மு: மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய
இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
அ: ஆமென்.
விழிநீர் பெருக்கிய மகளிருக்கு - அன்பு
மொழி நீர் நல்கி வழி தொடர்ந்தீர்
எனக்காக இறைவா எனக்காக இடர்பட வந்தீர் எனக்காக
எட்டாம் ஸ்தலம்