பதினான்காம் ஸ்தலம்
முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி
உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
இயேசு நாதரைக் கல்லரையில் அடக்கம் செய்கிறார்கள்:
விவிலியச் சிந்தனை(யோவான் 19:41-42)
அவர் சிலுவையில் அறையப்பட்டிருந்த இடத்தில் ஒருதோட்டம் இருந்தது. அங்கே புதிய கல்லறை
ஒன்று இருந்தது. அதில் அதுவரை யாரும் அடக்கம் செய்யப்படவில்லை. அன்று பாஸ்கா விழாவுக்கு
ஆயத்த நாளாய் இருந்ததாலும் அக்கல்லறை அருகில் இருந்ததாலும் அவர்கள் இயேசுவை அதில் அடக்கம்
செய்தார்கள்.
(லூக்கா 23:55-56)
கலிலேயாவிலிருந்து அவரோடு வந்திருந்த பெண்கள் பின்தொடர்ந்து சென்று கல்லறையைக் கண்டார்கள்
அவருடைய உடலை வைத்த விதத்தைப் பார்த்து விட்டு, திரும்பிப் போய் நறுமணப் பொருள்களையும்
நறுமணத் தைலத்தையும் ஆயத்தம் செய்தார்கள். கட்டளைப்படி, அவர்கள் ஒய்வுநாளில் ஒய்ந்திருந்தார்கள்.
ஜெபம் : (எல்லோரும்)
அன்பு இயேசுவே! உமது உடல் கல்லறையில் வைக்கப்பட்டாலும் மண்ணோடு மண்ணாகி அழிந்துபோகவில்லை.
நாங்களும் திருமுழுக்கின் வழியாக உம்மோடு கல்லறையில் அடக்கப்பட்டோம். பாவத்திற்கு
இறந்தோம். ஆனால், நீர் புத்துயிர் பெற்று எழுந்ததுபோல எங்களுக்கும் ஆன்மீக வாழ்வு
அளித்து, புதிய மனிதர்களாக வாழ நீர் வழிசெய்தீர். யாம் பெற்ற வாழ்வு இவ்வையகம் பெற்று
மகிழ்ந்திட அருள்வீராக. ஆமென்!
மு: எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில்
தயவாயிரும்.
அ: எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில்
தயவாயிரும்.
மு: மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய
இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
அ: ஆமென்
பொறுத்தருளும் கர்த்தாவே! உமது ஜனத்தின் பாவங்களைப் பொறுத்தருளும்.
என்றென்றைக்கும் எங்கள்மேல் கோபமாயிராதேயும் சுவாமி. தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
- மூன்று முறை
அன்பு இயேசுவே! கடவுளின் ஆட்சியை இவ்வுலகில் கொணர நீர் வந்தீர்.உமக்கு எதிராகச் செயல்பட்ட தீய சக்திகள் உமக்குக் கொலைத்தண்டனை விதித்தபோதிலும், நீர் சாவின்மீது வெற்றிகொண்டீர்.எங்களைப் பாவத்தின் அடிமைத் தளையிலிருந்து விடுவித்து எங்களுக்குப் புதுவாழ்வு தந்தீர்.
உயிர்த்தெழுந்த ஆண்டவராகத் தந்தையின் வலம் அமர்ந்து எங்கள் அரசராக ஆட்சிசெய்கின்றீர்.
"உலகம் முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" என்று வாக்குறுதி அளித்துள்ளீர்.
உமது அன்புச் சீடராக நாங்கள் வாழவும், நீர் சென்ற வழியில் நடக்கவும் எங்களுக்கு அருள்வீராக.ஆமென்